மே தினம்

மே தினம் 

வெறும் கற்களை கோட்டைகளாக்க 
தடைகளை வெற்றி தடையங்களாக்க
வாழ்கையை காவியமாக்க 
விதியை வீதியில் எரிய 

தோல்விகள் பல பெறினும் 
வெற்றியையே இலக்காய் கொண்டு
பாதைகள் பல இருப்பினும் 
நேர்மையையே நேர் வழியாய் கொண்டு

பேறிருளில் சிறு ஒளியாய் 
கனவுகளை நிஜங்களாக்க 
உதிரத்தை வியர்வையாக்கும் இனம் 
இது எங்கள் தினம் 
உன் தினம் 


-நான்   
மென்பொருளே ஆயினும் 
அதன் கணம் தெரிந்த 
ஒரு Software Engineer

நேர்முகம்

நான்:
வணக்கம் . நீங்கள் உங்கள் எழுத்து பணிக்கு நடுவே எனக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி . அடுத்த வாரம் வெளி வரப்போகும்  உங்கள் 'வாழ்க்கை ஒரு கேள்விக்குறி ' சிறுகதை தொகுப்பு பற்றி ஒரு கலந்துரையாடல் செய்யலாம் என்று வந்தேன். 

எழுத்தாளர் :
அது ஒரு பெரிய தொகுப்பாயிற்றே . 
நேரம் போதுமா ?

நான்:
சரி தான். அதில் தங்களை மிகவும் பாதித்த ஒரு கதை பற்றி மட்டும் பேசலாமா ?

நேர்முகம் - தொடர்ச்சி 1

பகுதி ஒன்றின் தொடர்ச்சி

நீண்ட நேர எண்ண ஓட்டங்களுக்கு பிறகு எழுத்தாளர் தொடர்ந்தார்.

அதுவரையில் நான் வலிப்பு வந்தவரை அவ்வளவு அருகாமையில் பார்த்ததில்லை. எந்த விதமான முதலுதவி செய்தும் அனுபவம் இல்லை. எதுவும்  செய்ய தெரியாமல் என் இயலாமையை எண்ணி அவனை போலவே என் உள்மனதும் துடித்தது. அதே நிலைமை தான் அங்கிருந்த மற்றவர்களுக்கும். கணினியின் கலைகள் பல தெரிந்தும் உயிர் காக்க எதுவும் செய்ய தெரியாத வேடிக்கை கூட்டம் நாங்கள்.

நேர்முகம் - தொடர்ச்சி 2

முந்தைய பாகுதிகள்  நேர்முகம் , நேர்முகம் - தொடர்ச்சி 1


எழுத்தாளர்: 

அடுத்த நொடியின் புதிர் புரியா யாவர்க்கும் ,
கண்ணிருந்தும் பார்வையில்லை.
வாழ்க்கையில்,
யார் தான் குருடனில்லை?

'வருங்காலம்' ஒளித்துவைத்திருக்கும்,
புதையல் கிட்டும் வரைக்கும்,
பூமியில்
யார் தான் ஏழை இல்லை?

குருட்டு ஏழைகளுக்கு ,எதிர்கால கனவெதற்கு ?
'காலம்'. அது தான் உன் அரசன்.
அடிமையே,போ. பொறுத்திரு. 
உன் 'காலன்' வரும் வரை


ரஜினி வெடி

"இன்னா வெடி நா இது.செம சவுண்டு" என் சட்டையில் இருந்த ஓட்டை வெளியே தெரியாமல் கையால் கசக்கி பிடித்துக் கொண்டு கேட்டேன். 


"ரஜினி வெடி டா,சும்மா அதுருதில்ல" 


"எங்கனா வாங்கின ?" 


"அங்க, அந்த முக்கு கடைல.நாட்டு வெடி" 


"எவளோ நா இது " 


"பத்து ,அம்பது ரூபா டா.நாளைக்கு இன்னும் கம்மியா தருவான்.ஆனா நாளைக்கு வாங்கி என்னா பண்றது ?ஸ்கூல். நீ ஒன்னு வெடிக்கிறையா? " 


"வேணாம் 
நா,கிளம்புறேன்" ரஜினி வெடியின் ஆசை என் மனதில் குடிகொண்டது.வீடு நோக்கி ஓடினேன். 

வீடு 

--
பசி.இன்று தீபாவளி விடுமுறை அதனால் பள்ளிக்கூடம் விடுமுறை ,சத்துணவு இல்லை. 

அப்பா வீட்டில் இல்லை,நேற்றிலிருந்தே.நேற்று இரவு அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் ஒரே சண்டை.எப்பவும் போல். 


அம்மாவும்,வீட்டில் இல்லை. தங்கையுடன் சார் வீட்டுக்குப் பாத்திரம் கழுவ போயிருக்கவேண்டும்.

அம்மாவை தேடி சார் வீட்டிற்குச் சென்றேன்.

சார் வீடு 

------- 

அம்மாவின் கூச்சல் வாசல் பக்கம் கேட்டது.சார் வீட்டு சந்து வழியாகப் பின்புறம் சென்றேன் 


"பச்ச புள்ள அத்த போய் ஏனம் கழுவ  சொல்றியே மா,உனக்கே நல்ல இருக்குதா  இது ? ஒரு பத்து நிமிஷம் வர லேட் ஆய்டுச்சு,அதுகுள்ள.பாவம் அந்தப் புள்ள.என் வவுத்துல வந்து பொறந்து சீரழியுது, அஞ்சு வயசுல ஏனம் கழுவுது எல்லா தல விதி.உங்கப்பன் இப்படி நாசமா போகாம இருந்திருந்தா இன்னிக்கு இந்த நெலமைக்கு வந்திருக்க வேனாம்" என்று பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த என் தங்கையின் முதுகில் ஒரு அடிவைத்து நகர்த்தினாள் அம்மா. 


தங்கை அழுது கொண்டே என்னிடம் வந்தாள். 

"என்னமா இது நல்ல நாள் அதுவுமா இப்படிப் பேசறே.நீ நேரத்துக்கு வந்தா நான் ஏன் அவள கழுவ சொல்ல போறேன்.ஏதோ பாவம் ,கஷ்ட படற குடும்பம்னு உன்னை வேளைக்கு வெச்சுகிட்டா சட்டம் பேசுற " என்றார் சார் மனைவி. 


"அதுகாண்டி புள்ளைய கழுவ சொல்லுவியா" என்றாள் அம்மா 


நானும் தங்கையும் வெளியில் வெடியை வேடிக்கை பார்க்க சென்றோம்.சார் முறுக்கு குடுத்தார்.அதை என் ஜோபியில் வைத்துக் கொண்டேன். 


அரைமணி நேரத்தில் அம்மா வாசலுக்கு வர,சார் மனைவி அம்மாவிடம்  

"இனிமே நீ வேலைக்கு வர வேண்டாம்.நின்னுக்கோ " என்றார். 

அம்மா அழுதுகொண்டே வீடு நோக்கி நடந்தாள் ,அம்மா அழுவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல . நானும் என் தங்கையும் வெடி குப்பைகள் இடையே இருக்கும் வெடிக்காத வெடிகளைத் தேடி பொறிக்கினோம் . 


வீடு 

-- 

அம்மா அழுகை நிறுத்தி இருந்தாள்.தங்கைக்குக் கடைசிக் கரண்டி கஞ்சி , அவள் வேண்டாம் என்றால் நான் கேட்டிருபேன்.அது என்னவோ பள்ளி விடுமுறை தினங்களில் மட்டும் பயங்கரப் பசி இருக்கும். 


மெதுவாக "அம்மா எனக்கு ரஜினி வெடி வாங்கித் தா மா.பத்து ,அம்பது ரூபா." என்றேன் 


"அட என்ன டா இது , ஒரு வேல கஞ்சிக்கு வழிய காணும் ஒனக்கு வெடி வேணுமாக்கும்.அந்தாண்ட போ" என்றாள் 


"அம்மா நாளிக்கு இன்னும் கம்மி யா தருவான், நாளிக்கு வாங்கித் தா மா" 


"சனியனே போ அந்தாண்ட" என்றாள் மறுபடியும் 


எனக்கு அழ வேண்டும் போல் வந்தது , மூலையில் உட்கார்ந்து ஓ வென அழுதேன்.ரஜினி வெடி கனவுகள் கண்ணீராய்க் கரைந்தது . என் தங்கை நாங்கள் பொறிக்கி வந்த வெடிகளில் ஒன்றை தேடி என்னிடம் கொடுத்தாள் . நான் கோபத்தில் அதைத் தூக்கி எறிந்தேன் , அவளும் அழுதாள். 


இரவு அப்பா வந்தார்.போதையுடன்.மறுபடியும் சண்டை ,அம்மா அழுகை....அப்பா அம்மாவை அடித்து விட்டுப் போய்விட்டார்.நானும் தங்கையும் சார் குடுத்த முறுக்கை சாபிட்டு , படுத்து கொண்டோம். 

அம்மா அழுது கொண்டிருந்தார்.வெளியே தூறல் ,உள்ளே கூரை இடுக்கில் சொட்டியது. 

பின் இரவில் என் தலை கோதி "நாளைக்கு வாங்கித் தரேன்" என்றாள் அம்மா , நான் தூக்கத்தில் புன்னகைத்தேன் 


தீபாவளி காசு 

----------

நேற்று நடந்தது நிஜமா? கனவா? என்ற குழப்பத்தில் இருந்த என்னையும் , தூங்கி எழுந்த என் தங்கையையும், அம்மா சார் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். 


'சார் ...சார்...' 


'என்னது?நீ இனிமே வர வேண்டாம்னு சொல்லிட்டனே" என்றாள் சார் மனைவி உள்ளிருந்தே. 


அம்மா ஈன ஸ்வரத்தில் 'அது இல்ல மா , தீவாளி காசு ...." 


'அது எல்லாம் இல்ல போ' 


'அப்படிச் சொல்லாதிங்க மா,எங்களுக்கு நீங்க செயலான எப்புடி.புள்ளங்க எல்லாம் ஏங்கி போய் இருக்குதுங்க.எதாச்சு கொடு மா " 


'அது எல்லாம் இல்ல போ' 


அங்கேயே நின்றிருந்த ஐந்து நிமிடங்களில் நானும்,தங்கையும் பத்து வெடிகள் பொறுக்கி இருந்தோம்.எல்லாம் மழையில் கொஞ்சம் நமத்து இருந்தது. 


ஐந்தாவது நிமிடம் சார் வந்தார்.அம்மாவிடம் ஐந்து ருபாய் கொடுத்தார் ."ரொம்பத் தேங்க்ஸ் சார் " என்றாள். 


வீடு நோக்கி நடந்தோம் , வழியில் அந்தக் கடையில் ரஜினி வெடி வைத்திருந்தார்கள் .அம்மா அந்தக் கடை வாசலில் நின்றாள்.நான் கண்டது கனவில்லையொ  என்று ஒருகணம் மனதில் சத்தமில்லாமல் சந்தோஷ சரம்.


ஏதோ யோசித்தவள் எதுவும் சொல்லாமல் அந்தக் கடையைத் தாண்டி சென்றாள் , அழுகை வந்தது. 'அம்மா...' என்றேன் 


"சரி ,வாங்கிதொல  இந்தா " என்று சார் கொடுத்த ஐந்து ருபாய் என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள் ,தங்கை மட்டும் என்னுடன் ஒட்டி கொண்டாள். 


நான் கண்டது கனவில்லை ,முதன் முதலாய் என் கண்களில் ஆனந்த கண்ணீர். என் தங்கையுடன் ஓடிச்சென்று கடையில் ஐந்து ருபாய் நீட்டி "அண்ணா அந்த ரஜினி வெடி குடுங்க" என்றேன்,துள்ளலாய். 


"ஒன்னு தான் வரும் " என்றார்.


"சரி கொடுங்க"

அப்போது என் தங்கை என் கை பிடித்து "அண்ணா அந்த ஊதா கலர் ரிப்பன் வாங்கி தா" என்றாள். 


"போ அந்தாண்ட"


கண்கள் கலங்க "உனக்கு நான் எவளோ வெடி பொறுக்கி குடுத்தேன்"என்றாள். 


ஒரு கணத்தில் என்னையும் அறியாது "அண்ணா அந்த ஊதா கலர் ரிப்பன் கொடுங்க " என்றேன். 


"அதுவும் அஞ்சு ரூபா எதாச்சு ஒண்ணுதா" என்றார் கடை அண்ணா .

நான் அவள் முகம் பார்த்து "சரி ரிப்பன் கொடுங்க " என்றேன் .என் தங்கை முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியை நான் பார்த்ததேயில்லை.அதேசமயம் என் வறுமையின் வலியை அது வரை அப்படி உணர்ந்ததும் இல்லை. 

எபோழுதும் வெளி வர தயாராய் இருக்கும் ஏமாற்றத்தின் துக்கத்துடன் வீடு நோக்கி நடந்தேன். 


--------- 


"அண்ணா அங்க பாரு" என்றாள் என் தங்கை "அங்க பரு நா.அதோ அந்த வெடி குப்பைல" என்றாள்,மிகப் பரபரப்பாக,மறுபடியும். 


நான் பாய்ந்து சென்று அங்கிருந்த ரஜினி வெடியை எடுத்தேன்.என் தங்கையை இருக்கி அனைத்து ஒரு முத்தமிட்டேன்.


வீட்டிற்கு ஓடி சென்று தீப்பெட்டி எடுத்து வந்து வாசலில் ரஜினி வெடி வைத்து பற்ற வைத்தேன். 


அந்தத் திரி வெடி வரை எறிந்து வெடிக்காமல் யோசித்தது .சிரித்தாள் தங்கை. 

"ஏ பொறு" என்றேன் 


'டாமல்' என்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. 


"
செம சவுண்டு" என்றாள் தங்கை. 

"ரஜினி வெடி,சும்மா அதுருதில்ல" என்றேன் 


---------------------------------- 


தீபாவளி முடிந்து அடுத்த நாள் எங்கோ வெடிக்கும் ஓர் ஒற்றை வெடியின் கதை இது


-- by ஜன்னல்